ஆயிரத்தில் ஒருவன்2 – The Rise of Chozha

AyirathilOruvan2

சில மாதங்களுக்கு முன்னர் ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஒரு யு டியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று தந்திருந்தார்.

அதில் நெறியாளர் அவரிடம் , ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 எப்போ சார் நாங்க எதிர்பார்க்கலாம் என்று கேள்வி கேட்டபோது, வந்த போது ஒரு அங்கீகாரம் குடுத்திருந்தா ரொம்ப தைரியமா அடுத்த பார்ட் எடுத்துருப்போம் இப்போ யோசனையா இருக்கு என்று சிரித்து கொண்டே விரக்தியுடன் சொன்னார்.

ரவீந்திரன் தயாரிப்பில், செல்வராகவனின் இயக்கத்தில், ராம்ஜி யின் ஒளிப்பதிவில், ஜிவி பிரகாஷின் இசையமைப்பில், கோலா பாஸ்கரின் படத்தொகுப்பில், கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென் நடிப்பில் 14 ஜனவரி 2௦1௦ இல் வெளிவந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன்.

1279 A.D , பாண்டியர்கள் சோழ மண்ணின் மேல் படையெடுத்து வருகின்றனர், பாண்டியர்களை எதிர்த்து போராடுகிறான் சோழ மன்னன். தோல்வி கண் முன்னே தெரிய, சோழ குலத்தின் அடுத்த வாரிசான இளவரசனை கொஞ்சம் மக்கள் கூட்டத்துடன் தப்பிக்க வைக்கிறான், அவ்வாறு தப்பிக்கும் போது பாண்டியர்களின் குல தெய்வ சிலையை அவர்களிடம் குடுத்து அனுப்புகிறான். பாண்டியர்களும் அவர்கள் குல தெய்வ சிலையை மீட்க எங்கெங்கோ தேடுகிறார்கள், ஆனால் சிலை கடைசி வரை அவர்களிடம் அகப்படவே இல்லை.

ஆயிரம் வருடங்கள் கழித்து, அனிதா (ரீமா சென்) தலைமையில் ஒரு குழு அதை தேடுகிறது, எவ்வாறு அந்த சிலையை எடுத்தார்கள், நடுவில் எந்த மாதிரி தடங்கல்கள் வந்தது, அதை எப்படி சமாளித்தார்கள் என்று விரிகிறது ஆயிரத்தில் ஒருவன்.

சேரியில் இருந்து கூலி வேளைக்கு வருகிறான் ஒருவன், அவனுக்கு பெரிதாய் நாட்டின் மேல் எந்த பற்றும் இல்லை, காசு குடுத்தால் வேலை செய்வான் என்றவாறு அறிமுகம் ஆகின்றது முத்துவின் (கார்த்தி) கதாபாத்திரம்.

எந்த ஒரு படத்திலும் நிகழ்வுகள் தான் ஒரு கதாபாத்திரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்.

எதிர்பாரா நேரத்தில் தன்னுடைய மாமா தன் உயிரை தந்து அவன் உயிரை காப்பாற்ற ஆரம்பிக்கும் போது ஏற்படும் அந்த நிகழ்வு கோர்வை, லாவண்யாவிடம் (ஆண்ட்ரியா) ஒரு தலை காதல், அனிதாவின் அலட்சிய பார்வை, நலிவுற்ற சோழ மக்களிடம் அகப்பட்டு சித்திரவதை அனுபவிப்பது, சிறுவன் ஒருவன் அவன் மேல் சிறுநீர் கழிப்பது, புலி உருவம் முதுகில் தெரிய தூதுவனாய் மக்கள் முன் உயர்வது, படை தளபதியாய் தன் மன்னன் (பார்த்திபன்) முன் நிற்பது, தன்னை தூதுவனாய் நம்பிய மன்னன் இறக்க அவனை தோளில் தூக்கிக்கொண்டு மக்களும் கடலுக்குள் இறங்கி தற்கொலை செய்து கொள்வதை கையறு நிலையில் பார்ப்பது, கடைசியில் கழுத்தை அறுத்து கொள்ள போகும் சோழ இளவரசனை காப்பாற்றி தானும் தப்பிக்கும் போது முடிகிறது.

எப்போதுமே செல்வராகவனின் படங்களில் அவரின் ரசிகர்கள் எதாவது குறிப்பை உணர்த்தும் காட்சிகளை தேடி கொண்டே இருப்பார்கள். அவ்வாறான ஒரு சுவாரசியமான ஒரு தியரியை நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டு இருந்தார் . அதாவது ஆயிரத்தில் ஒருவனில் வரும் குமார் கதாபாத்திரம் வேறு யாரும் இல்லை, புதுப்பேட்டையில் குப்பை தொட்டியில் போடப்படும் குழந்தை தான் அது, ஏனென்றால் ஆயிரத்தில் ஒருவனில் குமார் கதாபாத்திரம் சேரியில் இருந்த வருபவனாய் சித்தரிக்க பட்டிருக்கும். அவன் மாமா என்று சொல்பவர் கூட சொந்த மாமா தான் என்பதற்கான எந்த காட்சி அமைப்புகளும் வலுவாக இல்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டுருந்தார். இந்த மாதிரியான தியரிகள் எப்போதுமே செல்வராகவனை சுற்றி கொண்டே இருக்கும் .

வெளியில் சிடு சிடு முகமும் உள்ளுக்குள் ஒரு பாதுகாப்பின்மையை உணரும் ஒரு நாகரிக பெண்ணாக வருவார் லாவண்யா (ஆண்ட்ரியா).

நீ என்ன பெரிய வெண்ணையா, சரிதான் போடா என்ற தொனியிலே இருக்கும் லாவண்யாவின் செய்கைகள். செல்வராகவனின் படங்களில் கதாநாயகனுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தரப்படுமோ அதற்கு ஒரு படி மேலே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

நான் சும்மாவெல்லாம் சொல்லவில்லை , ‘துள்ளுவதோ இளமை’ முதல் ‘இரண்டாம் உலகம்’ வரை படங்களை பாருங்கள் உங்களுக்கே புரியும்.

தொலைத்து போன தங்கள் குல தெய்வத்தை பாண்டியர்கள் எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என தங்கள் தலைமுறைகளுக்கு அந்த உணர்வை கடத்துகிறார்கள்.

எனக்கு எங்கள் சிலை வேண்டும் அதற்கு நாங்கள் எத்தனை பேரை வேண்டுமென்றாலும் கொல்லுவோம் என்று வகையில் அனிதா பாண்டியன் (ரீமா சென்) இருப்பார் . எப்போதுமே குரூரமாய் இருக்கும் அனிதா முதல் முறை தங்கள் குல தெய்வத்தை பார்க்கும் போது பதறி உடைந்து போய் அனிச்சையாய் அந்த சிலையின் முகத்தை துடைப்பார். நன்றாக பார்த்தோமே ஆனால் முன்பு சோழ மன்னன் சிலையில் எச்சிலை எந்த இடத்தில் துப்பினாரோ அந்த இடத்தை துடைப்பதை போலவே இருக்கும் .

இத்தனை நாள் எங்கள் சிலையை எங்களுக்கு காட்டாமல் தவிக்க விட்டு இருக்கும் உங்களை உடலாலும் மனதாலும் ரணப்படுத்தி கொண்டே இருக்க வேண்டும் என்றே அவரின் செய்கைகள் இருக்கும் கடைசி வரை.

இன்னும் தமிழ் சினிமாக்களில், என்னை பொறுத்த வரையில் சோழ மன்னன் (பார்த்திபன் ) அறிமுக காட்சியை போல வேறு எந்த மன்னன் காட்சியும் அமையவில்லை. கரிய உடல், சிவந்த கண்கள், அகண்ட தோள்களாக பார்த்திபன் அந்த தேரில் வரும் காட்சிகள் எல்லாம் வேற லெவல். திருடர்களை மன்னன் நடக்கும் பாதையில் சிரச்சேதம் செய்து அந்த ரத்தத்தில் நடந்து வரும் சீன் எல்லாம் …ப்பா ..

ஆயிரத்தில் ஒருவனின் இசையமைப்பாளர் யார் என்று கேட்டால் யுவனாக இருக்கலாம் என்றே சொல்லுவார்கள். ஆனால் ஆயிரத்தில் ஒருவனின் இசையமைப்பாளர் ஜிவி . பிரகாஷ்.

பின்னணி இசையில் அவர் இசைகோர்த்த ஆயிரத்தில் ஒருவனை இன்னும் அவரின் மற்ற படங்களில் அவரால் முறியடிக்கவில்லை , முறியடிப்பாரா என்றும் தெரியவில்லை . இன்னும் பலரது மொபைல் ரிங்க்டோன் பார்திபனின் எண்ட்ரி பிஜிம் தான் .

தன் மக்களே உணவுக்காக தன்னிடம் கையேந்துவது , பால் வற்றி ரத்தம் சுரக்கும் தாயிற்கு ஒரு துண்டு கறியை தந்து இயலாமல் பார்ப்பது, அடுத்த ஆட்சிக்கு வர போகும் பட்டத்து இளவரசன் தாயின் இடுப்பில் உட்கார்ந்து இருக்கும் போது முறைப்பது,

தன் மக்களை எப்படியாவது காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன் வந்துருப்பவள் தூதுவனா இல்லை வேறு ஒருத்தியா என்று சந்தேகத்துடன் பார்ப்பது , உண்மையான தூதுவன் கிடைத்து விட்ட சந்தோஷத்தில் அவனுடன் தாண்டவம் ஆடுவது,

தன் முன்னே இருக்கும் படை தன்னை விட பலத்தில் அதிகம் என்று தெரிந்தே அவர்களுடன் மோதுவது, வஞ்சிக்கப்பட்டோம் என்று தெரிந்தும் கடைசி வரை போராடுவது ,

கடைசியில் தன் கண் முன்னே தன்னுடைய மனைவியும் மக்களும் சங்கலியால் கட்டி சீரழிக்கப்படும் போது செய்வது அரியாமல் திகைத்து கடலை பார்க்கும் போது சோழ தேசத்து கப்பல் வருவது போல பிம்பம் தெரிய கண்களை மூடும் போது, திரையில் பார்த்திபன் பார்த்திபனாக தெரியவில்லை சோழ மன்னனாகவே உருமாறியிருந்தார்.

ஆயிரத்தில் ஒருவன் வெளி வந்த போது பல பேர் சொன்னது,

படம் புடிக்கலைனு இல்ல ஆனா புரியலை

முதல் பாதியை விட ரெண்டாம் பாதி இழுவ

சோழ மன்னன் என்ன இவ்வளவு காமெடியா ஆடுவானா ?

அதெப்படி இந்த நவீன காலத்துலயும் மக்கள் அப்படி இருப்பார்கள் ?

இதற்கு பதிலாக, முதலில், நமக்கு தமிழ் தெரியவில்லை
என்றால் அது யாருடைய தவறு ?

சிவனை கடவுளாக கொண்டிருக்கும் சோழ மன்னன் கால்களை தூக்கி சிவ தாண்டவம் ஆடாமல் வேறு எவ்வாறு ஆடுவான்?

இன்றைய நவீன காலங்களிலும் நமக்கு பக்கத்தில் இருக்கும் அந்தமானில் சென்டினல் ஆதிவாசிகள் வெளி உலக தொடர்பு இல்லாமல் இருக்கிறார்கள் , அதற்க்கு அவர்கள் முழுதும் இல்லை என்று ஆகிவிடுமா ??

உண்மையில் எதிர்பார்த்த அளவில் ஆயிரத்தில் ஒருவன் அதிகமாய் ஓடாத காரணத்தில் ஒன்றாய் நான் யூகிப்பது அவதார் திரைப்படம். ஆம் சாட்சாத் ஜேம்ஸ் காமெரநூனின் அவதாரே தான் . ஏனென்றால் அவதார் வெளி வந்த தேதி 18 டிசம்பர் 2௦௦9 , கிட்டதட்ட ஆயிரத்தில் ஒருவன் வெளி வருவதற்கு 2 மாதங்களுக்கு முன்னால், இப்போது நம் எந்திரன் 2 .0 எடுத்திருக்கிறார்களே அதே Native 3D தொழில்நுட்பத்தில் 8 வருடங்களுக்கு முன்னால் வந்தது .

ஊரெங்கும் சக்கை போடு போட்ட அவதாரை நாம் ரெபெரென்சாக வைத்து ஆயிரத்தில் ஒருவனை நாம் அணுகியது தான் மிக பெரிய தவறு .

போனது போகட்டும்.

இந்த நிலையில் செல்வராகவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவரது மனதிற்குள் தீரா ஓசையாய் ஆயிரத்தில் ஒருவன் 2 எடுக்க வேண்டும் என்று இருப்பதாய் குறிப்பிட்டு இருந்தார் .

Capture

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நிச்சயமாக அதற்கான சூழல் அமைவது போல தெரிகிறது .

இந்த முறை நிச்சியமாக சோழனின் பயணம் மாபெரும் வெற்றி அடையுமாக …!!!!

– விக்னேஷ் கலியபெருமாள் (Team KollyTalkies)

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published.