நகைச்சுவை அரசர்கள்
N.S.கிருஷ்ணன்
“நண்பர் நடமாட்டமெல்லாம் ஒண்ணிலே…
எந்த நாயும் எட்டிப் பாக்காது இருபத்தொண்ணிலே…”
இந்த வரிகளில் தெரிகின்ற கன்னத்தில் அறையும் உண்மையையும், தீர்க்க தரிசனத்தையும் பாருங்கள்… அதுதான் N.S.K. இவரை பற்றிய பதிவு இந்தத் தளத்தில் இருப்பதையே பெருமையாக எண்ணுகிறோம்.

வில்லுபாட்டுக் கலைஞராகத் தனது கலைப் பயணத்தை தொடங்கியவர் N.S.கிருஷ்ணன் அவர்கள். அதனாலேயே பெரும்பாலும் அவர் நகைச்சுவைகள் பாட்டு வடிவிலேயே இருந்தது. ரசிகர்களின் அறிவின் முதிர்ச்சியை நன்கு அறிந்தே அவரின் வசனங்களை தயார் செய்வார். அவர் ஒருமுறை வானொலியில் ஆற்றிய உரையில்…
“பல்வேறு துறைகளிலும் முறையான ஞானமிருந்தால் மட்டுமே மக்களைச் சிரிப்பூட்ட வைக்கும் சிறந்த நகைச்சுவைக் கலைஞனாக சோபிக்க முடியும்.” என்றார். எவ்வளவு தெளிவு பாருங்கள்.

தமிழ் திரையுலகில் 100க்கும் மேற்ப்பட்ட படங்கள் நடித்தார்கள் என்கிற பெருமையை முதன் முதலாக பெற்றவர்கள் N.S.கிருஷ்ணன் மற்றும் T.A மதுரம் தம்பதியர்.
கலைவாணரின் மேதைமையில் சில துளிகள் இங்கே…
- ‘பணம்’ படத்தில், ‘எங்கே தேடுவேன்… பணத்தை எங்கே தேடுவேன்…’ பாடலில்…
“… தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ? தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சூடஞ் சாம்பிராணியாய்ப் புகைந்து போனாயோ?”
- ‘ராஜா ராணி’ படத்தில், ‘சிரிப்பு… அதன் சிறப்பை…’ பாடலில்…
“…மனம் கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு –
இது களையை நீக்கி கவலையைப் போக்கி மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு”
- ‘அம்பிகாபதி’ படத்தில், ‘கண்ணே உன்னால் நான் அடையும்…’ பாடலில்…
“…கலை என்றால்… கலையும் ஆகும், கலைத்தலும் ஆகும்…
மலை என்றால்… மழையும் ஆகும், மலைத்தலும் ஆகும்…”
நல்லதம்பி படத்தில் ‘கிந்தனார்’ கதாகாலட்சேபம், ‘விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி’ என்று எத்தனையோ வைரங்கள். மக்களைக் கவலை மறக்க வைப்பதும், மகிழ்ச்சியில் சிரிக்க வைப்பதும் கடவுளின் குணங்களில் ஒன்று, என்பது உண்மையானால்,
சத்தியமாக, N.S.K. ஒரு கடவுள்தான்…
சிறப்பான சுருக்கமான சுவையான பதிவு.
முயற்சிக்ககுப் பாராட்டுக்கள்.