“டணால்” தங்கவேலு

நகைச்சுவை அரசர்கள்

‘எழுத்தாளர் பைரவன்’ என்றவுடன் உங்கள் உதட்டின் ஓரம் புன்னகை தோன்றுகிறதா?அதுதான் தங்கவேலு அவர்களின் வெற்றி. பொதுவாகத் திரைப்படம் என்றாலே அது கற்பனை கதாபாத்திரங்களின் கூட்டுதான்.  ஆனால், அதற்குள்ளும் ‘பைரவன்’ என்கிற இன்னொரு கதாபாத்திரத்தைத் தோற்றுவித்து, அதில் நகைச்சுவையைக் கொண்டு வருவது என்பது அசாத்தியமானது. திரு. K.A. தங்கவேலு இது போன்ற சாமர்த்தியங்கள் நிரம்பப் பெற்றவர்.

‘டணால்’ தங்கவேலு
‘டணால்’ தங்கவேலு

தங்கவேலுவுக்கு முன்னால் இருந்த காளி. N. ரத்னம் போன்ற நடிகர்கள், தங்களை முட்டாளாக வெளிப்படுத்தி, நகைச்சுவை செய்தார்கள். பிறகு வந்த நாகேஷ், சந்திரபாபு போன்றோர் உடல்மொழியைப் பிரதானப்படுத்தி  நகைச்சுவை செய்தார்கள்.  தங்கவேலு, இவர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு, வசன உச்சரிப்பு மற்றும் வசன வெளிப்படு முறையின் மூலம் சிறந்த நகைச்சுவையை வெளிப்படுத்தினார்.

 

அறிவாளி, கல்யாணப் பரிசு, தில்லானா மோகனாம்பாள், தேன் நிலவு, எங்க வீட்டுப் பிள்ளை, கலாட்டா கல்யாணம், பாச மலர், தெய்வப்பிறவி என்று அவரின் நகைச்சுவை வைரங்களைப் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.  அவ்வளவு ஏன்? சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட ஓய்வு பெறும் காலத்தில் கூட ‘மனைவி ரெடி’ படத்தில் வயதான வாத்தியார் வேடத்தில் அவர் பாண்டியராஜனோடு சேர்ந்து செய்யும் ரகளைகள் சொல்லி மாளாது.

இன்றைய முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான ‘சந்தானம்’ ஒரு பேட்டியில், தான் ‘தங்கவேலுவின் ரசிகன்’ என்றும் அவர் பாணி தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். CLEAN HUMOUR என்னும்படியான களங்கமில்லாத, சுத்தமான நகைச்சுவை மூலமாக தமிழ் சினிமா உலகில் ஒரு தன்னிகரில்லா இடத்தைப் பிடித்திருப்பவர் திரு. தங்கவேலு.

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published.